St. Paul the Hermit - புனித வனத்து சின்னப்பர் ஆலயம்
Church History
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் செல்வ சீமான்களாகச் சீரும் சிறப்புமாக வாழ்ந்த, தெய்வப் பக்தி கொண்ட இன்னாசி கவுண்டர், சந்தன கவுண்டர் குடும்பத்தினரால் புனித வனத்துச் சின்னப்பர் ஆலயம் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
தங்கள் குடும்பத்தினர் வருவதற்கும், ஜெபத் தபத்தில் ஈடுபடுவதற்கும் தங்கள் சொந்தச் செலவில் இக்கோயிலைக் கட்டினார். அதைச் சுற்றி ஆலமரங்கள் நட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் புனித வாரத்தில் பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனி ஆகிய மூன்று நாட்களும் திண்டுக்கல் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பங்குகளிலிருந்தும் கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்தச் செலவில் தியானம் நடத்தி வந்தார்கள். தற்போது வரை இந்த வழி மரபு நடைபெறுகிறது.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஆடுகள் அடித்து, அன்னதானம் செய்வார்கள்.
தியானம் செய்வார்கள் தங்குவதற்காகத் தியான மண்டபமும் கட்டினார்கள்.
தாங்கள் நடத்தி வந்த வியாபாரம், அரசியல் மாற்றத்தினால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் சிறப்பாக நடத்தி வந்த ஆண்டுத் தியானத்தை அவர்களால் நடத்த முடியாமல் போனது.
புனிதரின் பக்தி நாள்தோறும் வளர வேண்டும் என்பதற்காக இன்னாசி கவுண்டர், புனித வனத்துச் சின்னப்பர் ஆலயத்தையும், தியான மண்டபத்தையும் 96 கிராமங்களுக்குத் தலைமை இடமாக விளங்கிய மேட்டுப்பட்டி பங்குத் தந்தையிடம் ஒப்படைத்தார்.
1950 இல் பெஸ்கி கல்லூரி திண்டுக்கல்லில் நிறுவப்பட்டது. புனித சின்னப்பர் ஆலய பராமரிப்பு பணி பெஸ்கி கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
அவர்களுடைய கடின உழைப்பாலும் பொருள் செலவினாலும், காடு திருத்தப்பட்டுச் சோலையானது. பெஸ்கி கல்லூரி குரு மாணவர்களின் தியான பயிற்சிப் பாசறை இடமாக விளங்கியது. இந்நாட்களில் கிறிஸ்துவப் பொதுமக்களும், பிற மத அன்பர்களும் ஆலயத்திற்கு அதிக அளவில் வர ஆரம்பித்தனர்.
கிணறு வெட்டப்பட்டது. மின்சார மோட்டார் பொருத்தப்பட்டது. குடிதண்ணீர் வசதிச் செய்யப்பட்டது. தியான மண்டபம் பழுதுபார்க்கப்பட்டது. நாட்டு ஓடு போட்ட கூரை அகற்றப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகளால் மேய்ப்பட்டது. குளியல் அறைகளும், கழிப்பிடங்களும் கட்டப்பட்டன. இதில் நிரந்தரமாக இயேசு சபை குழுக்கள் தங்கிப் பணிபுரியத் தொடங்கினர். 1950 முதல் 1990 வரை சேசு சபையின் பொறுப்பில் இது வளர்ந்து வந்தது.
காலத்தின் தேவையால், குருசடியைச் சுற்றி இருக்கும் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவையை முன்னிட்டுப் பங்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பங்காக உருவாக்கலாம் என்று திருச்சி ஆயர் கேட்டபோது, எல்லாம் இறைவனின் மகிமைக்கு என்று திண்டுக்கல் இயேசு சபையார் குருசடியை ஆயர் இடம் ஒப்படைத்தனர்.
வனத்துச் சின்னப்பர் குருசடி தனிப் பங்காக உருவானது. யாகப்பன்பட்டி, கல்லுப்பட்டி, மருதாசிபுரம், வேடப்பட்டி, பொன்னகரம், அந்தோணியார் நகர், தண்டல்காரன் பட்டி ஆகிய ஊர்களைத் தனக்கெனக் கொண்டு பங்கு உருவானது.
14.07.1991 குருசடி வரலாற்றில் பொன்னான நாள். அன்றுதான் அப்போதைய திருச்சி ஆயர் எஸ் எல் கப்ரியல் குருசடி பங்கை ஏற்படுத்தி, அதன் எல்லைகளாக வடக்கே நத்தம் சாலை, தெற்கே சிறுமலை அடிவாரம், கிழக்கே சிறுமலை சாலை, மேற்கே மொட்டணம்பட்டி -என அறிவித்தார். அன்றைய தினமே பங்கு இல்லத்தையும் புனிதப்படுத்தினார்.
முதல் பங்குத் தந்தையாக அருட்திரு ஜே. ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டார். பங்கு இல்லம் கட்டிப் புனிதப்படுத்தப்பட்டது. திருத்தலம் ஆலயம் மிகச் சிறிதாக இருந்ததால், ஆலமர நிழலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட அடர்ந்து பறந்து விரிந்த ஏழு ஆலமரங்கள் இன்றும் உள்ளன. இங்குள்ள ஆலமரங்கள் விழுதுகள் இல்லாமல் இருப்பது சிறப்பு.
ஆலயத்தின் தேவையை உணர்ந்த ஆயர், 17 11 1993 அன்று பெரியதொரு பங்கு ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
1997 ஆம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 1.6. 1997 புதிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
இங்கே எழுந்தருளி இருக்கும் வரம் தரும் தூய வனத்துச் சின்னப்பர் புதுமை புரிவது வல்லவர்.
கேட்டவரம் தருவதில் வள்ளல்.
அண்டி வந்தவர்களுக்கு அடைக்கலம்.
திக்கற்றவர்களுக்குத் துணை.
புனிதரைத் தேடி வருபவர்களுக்கு மிகச்சிறந்த நண்பர்.
நலம் காக்கும் நல்ல மருத்துவர்.
இவரைக் கண்டால் பாம்புகள் பயந்து ஓடும்.
விவசாயிகளின் பாதுகாவலர்.
ஆடு மாடுகளின் நோய்த் தீர்க்கும் அற்புத மருத்துவர்.
விவசாயப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை விரட்டும் சக்தி உள்ளவர்.
புனித சின்னப்பர் ஆலயத்திற்கு அருகிலேயே அருட்தந்தை அருமைசாமி அவர்களின் முயற்சியால் முதியோர்கள் தங்குவதற்கு இல்லம் கட்டப்பட்டது.
இவ்வில்லத்தில் பாண்டிச்சேரி குளுனி சபை சகோதரிகள் பராமரிக்கின்றனர்.
புனித வனத்துச் சின்னப்பர் ஆலயம் உயர்ந்த மேட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் கோபுரம் வானளவு உயர்ந்திருக்கிறது.
பக்தர்கள் பக்தியோடு குருசடிக்குத் திருயாத்திரையாக வருகிறார்கள். வேண்டுதலுக்கு விடப்பட்ட ஆடு, கோழிகளையும் அன்னதானம் செய்கிறார்கள். பொங்கலிட்டு மகிழ்கின்றனர்.
வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்கள் முதல் யாத்திரையாகச் சின்னப்பர் ஆலயத்திற்கு வருகிறார்கள்.
பள்ளி சிறக்க மாணவ, மாணவியர்கள் ஞானத்திலும், அறிவிலும் வளர ஆசிரியர்களும், மாணவர்களும் குருசடிக்கு குழுவாக வருவார்கள்.
வியாபாரிகளும் தங்கள் தொழில் முன்னேற்றம் காண குருசடிக்கு வருகிறார்கள்.
உடல் நலம் அற்றோர், நல்ல வரன் வேண்டுவோருக்குத் திருமணம் நிறைவேறுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபிப்போர் குழந்தை செல்வம் பெறுகின்றனர்.
மனமுடைந்து இங்கு வருவோர் மன அமைதிப் பெறுகின்றனர்.
குடும்பச் சண்டை என்று வரும் தம்பதியர், திரும்புகையில் சமாதானத்தோடு செய்கின்றனர்.
தேர்வுக்குத் தயாரிப்போர் வெற்றிப் பெறுகின்றனர்.
பல தேவைகள் என்று வேண்டுவோர் அனைத்தும் பெற்றுக் கொள்வதால், சிறுமலை தென்றல் காற்றுத் தாலாட்டும் குருசடியில் கட்டுச் சோறு கட்டி வந்து உண்டு மகிழ்ந்து. ஜெபித்து வருகின்றார்கள்.
தொடர்ந்து பணியாற்றிய பங்குத் தந்தையர்களால் சிற்றாலயம் புதுப்பிக்கப்பட்டது. பெரிய திருத்தலம் புதிய பீடம் அமைக்கப்பட்டது. திருமண மண்டபம் மற்றும் மறைக்கல்வி மண்டபம் கட்டப்பட்டது. வனத்துச் சின்னப்பர் ஆலயம் ஆஸ்பெஸ்டாஸ் பிரித்துக் கான்கிரீட் போடப்பட்டது. புதிய பீடம் அமைக்கப்பட்டது. பங்கு வளாகத்தில் சுரூபங்களும், திருத்தலபீடத்தில் சுரூபங்கள் அமைக்கப்பட்டன. 100 கிலோ எடைக் கொண்ட ஆலயமணி நிறுவப்பட்டது.
இப்பொழுதும் நமது சின்னப்பர் திருத்தலத்தில் அதிசயங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் ஐந்தாம் வாரம் திருயாத்திரை நடைபெறுகிறது.
பங்கு தந்தையர்கள்:
1. அருட்திரு ஆரோக்கியசாமி
2. அருட்திரு பீட்டர் ஜான்
3. அருட்திரு மரிய லூயிஸ்
4. அருட்திரு சிரில் ஜோசப்
5. அருட்திரு அம்ரோஸ்
6. அருட்திரு ஜோசப்
7. அருட்திரு ஜான் பீட்டர்
8. அருட்திரு ரூபன் ஞானசேகர்
உதவி பங்கு தந்தையர்கள்:
அருட்திரு ரமேஷ்
அருட்திரு அந்தோணிசாமி
அருட்திரு செபாஸ்டின்
அருட்திரு சகாயராஜ்
அருட்திரு மேத்யூ
Information
Adiyanuthu B.O.
Dindigul Dt.
Tamil Nadu - 624 003 - India




