My Catholic Church LogoMy Catholic Church
Get App
Home > Directory > India > Tamil Nadu > Vellore > Kilnathur > Arputha Madha Church

Arputha Madha Church

Vellore Diocese • Tamil Nadu, India

Church History

திருவண்ணாமலையில் அமைந்துள்ள கீழ்அருணை அல்லது கீழ்நாத்தூர் வடஆற்காடு பகுதியின் மிகவும் பழைமை வாய்ந்த மக்கள் குடியேற்றம் அமைந்த இடமாகும். கி.பி 1606ஆம் ஆண்டு இயேசு சபை மறைப்பணியாளர் இராபர்ட் தி நொபிலி புனித ஃபிரான்சிஸ் சவேரியாரின் அடிச்சுவடுகளைத் தழுவி புதிய மதுரா மிஷன் மறைப்பணித் தளத்தை, திருச்சிராப்பள்ளியைத் தலைமைப்பீடமாகக் கொண்டு ஆரம்பித்தார். 18வது நூற்றாண்டுகளில் வடஆற்காடு மாவட்டத்தின் மிகவும் முதன்மையான மிஷன் ரோமன் கத்தோலிக்க மிஷன் ஆகும். பாண்டிச்சேரியைத் தலைமையிடமாகக் கொண்டு ஃபிளாவியோபோலிஷ் ஆயரின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டது. அதன் பின்னரே பல கிறித்தவ மிஷனரிகள் குறிப்பாக லூத்தரன் மிஷனரிகள் திருவண்ணாமலையில் தங்கள் பாதம் பதித்துள்ளனர். கி.பி 1676ஆம் ஆண்டுகளில் அருட்தந்தை ஆண்ட்ரு பெரேரா வேட்டவலம் பகுதியில் ஏறத்தாழ 60 கிறித்தவர்களைக் கொண்டு திருஅவையை ஆரம்பித்தார். அதன்பின் அவர் செங்கம் சென்று அங்கே ஏறத்தாழ 1100 கிறித்தவர்களைக் கொண்டு சபையைக் கட்டியெழுப்பினார். கி.பி 1681 மற்றும் 82களில் புனித அருளானந்தர் மற்றும் வீரமாமுனிவர் இவர்களின் அயராத உழைப்பினால் செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் கிறித்தவம் பரவ ஆரம்பித்தது. புனித அருளானந்தர் செஞ்சியில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியதற்கான கல்வெட்டுக்கள் இன்றும் செஞ்சி ஆலயத்தில் காணக்கிடக்கிறது. இக்காலகட்டத்தில் அத்திப்பாக்கம் மிஷன் மதுரை மிஷனின் அங்கமாக இருந்து வந்துள்ளது. கி.பி. 1691-ல் அருட்தந்தை ஃபிரான்சிஸ் லேனிஸ், புனித அருளானந்தரின் சீடராக இருந்தவர் செங்கம் தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டாம்பட்டுப் பணித்தளத்தை உருவாக்கினார். பின்னர் 1740-களில் அருட்தந்தை ஜோசஃப் டிரம்ப்ளே அத்திப்பாக்கம் மற்றும் கொரட்டாம்பட்டு பணிமையங்களின் பொறுப்பேற்றுச் செயலாற்றினார். கி.பி 1773-இல் இயேசு சபை முடக்கப்பட்டதற்குப் பின் 1776-களில் பாரிஸ் வேதபோதக சபையினர் பாண்டிச்சேரி மிஷன் பொறுப்பேற்றனர். கி.பி. 1854 ல் பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில் அத்திப்பாக்கம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு அருட்தந்தை பியர் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். கி.பி. 1870-களில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அத்திப்பாக்கம் 5318 கிறித்தவர்களைக் கொண்டிருந்தது. கீழ்நாத்தூர் அதன் மறைபரப்புத் தளமாக இருந்து வந்துள்ளது பாரம்பரியம் மூலம் அறியப்படுகிறது. அதன்பின்னர் வேட்டவலம் பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டத்தின் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது கீழ்நாத்தூர் அதன் கிளைப்பங்காக ஆனது. அருட்தந்தை J.S தாராஸ் MEP அவர்களின் முயற்சியால் கி.பி. 1930ல் கெங்கப்பட்டு பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில் வேட்டவலம் பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை அமலதாஸ் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். இப்பங்கானது திருவண்ணாமலை தாலுகாவைச் சார்ந்த பல தூரமான கிராமங்களை கிளைப்பங்காகக் கொண்டிருந்தது. அவற்றில் கீழ்அருணை என அழைக்கப்படும் கீழ்நாத்தூர் கிராமமும் ஒன்று. இயேசு சபையினர் பாதம் பதித்த இங்குப் புனித ஃபிரான்சிஸ் சவேரியார்க்குச் சிற்றாலயம் ஏற்கனவே கட்டப்பட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 03 ஆம் தேதி விழா எடுக்கப்பட்டு, புனித ஃபிரான்சிஸ் சவேரியார் திருவுருவம் தாங்கிய தேர்ப் பவனியும் நடைபெற்றதாகப் பாரம்பரியமாக அறியப்படுகிறது. இயேசு சபை துறவிகளுக்கே உரித்தான வரத்தின்படி இங்கே சிற்றாலய வளாகத்தில் புனித சேவியர் மணல் தொடக்கப்பள்ளி ஒன்று நடந்து வந்துள்ளது. கி;.பி 1969 இல் சில பங்குகள் பாண்டிச்சேரி உயர் மாவட்டத்திலிருந்து, 1952ல் சென்னை-மயிலை மாவட்டத்திலிருந்து பிரிந்த வேலூர் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டன. அப்போது கெங்கப்பட்டுப் பங்கும் வேலூர் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. அருட்தந்தை A.T. தாமஸ் பொறுப்பேற்றுப் பங்கை வழிநடத்தினார். கீழ்நாத்தூர் கெங்கப்பட்டுப் பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது. கி.பி 1972 இல் திருவண்ணாமலை புதிய பங்காகவும், மறைக்கோட்ட தலைமைப்பீடமாகவும் உயர்த்தப்பட்டு இத்தாலி நாட்டு சலேசிய மறைப்போதகர் அருட்தந்தை ஃபிரடெரிக் கப்பியாகி SDB முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று வழிநடத்தினார். கீழ்நாத்தூர் அதன் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. கி.பி 1974-இல் அருட்தந்தை ஃபிரடெரிக் கப்பியாகி SDB அவர்களின் பெருமுயற்சியால் கீழ்நாத்தூரில் புதிய ஆலயம் கட்டப்பட்டு வேலூர் மறைமாட்ட ஆயர் மேதகு ஆர். அந்தோணிமுத்து அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. கி.பி 1984-இல் புனித தெரசாவின் கார்மேல் சபை துறவற அருட்கன்னியர்கள் இல்லத்தையும் அதன்பின் கிறித்தவ மக்களுக்கான குடியிருப்பு வீடுகளையும் கட்டி அற்புத மாதா நகரை உருவாக்கினார். புனித அற்புத மாதாவை பாதுகாவலியாகவும், புனித ஃபிரான்சிஸ் சவேரியாரை துணைப் பாதுகாவலராகவும் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதம் கடைசி ஞாயிறு அன்று அன்னைக்கு விழாவும் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. நீண்ட கத்தோலிக்கக் கிறித்தவ விசுவாச வரலாற்றையும் திருவண்ணாமலையின் மூத்த கிறித்தவ குடியுமான கீழ்அருணை எனப்படும் கீழ்நாத்தூர் மேதகு பேராயர் A.M. சின்னப்பா, அவர்கள் கி.பி. 2001-இல் திருவண்ணாமலை தூய உலக மாதா பங்கிலிருந்து பிரித்து தனிப்பங்காக உயர்த்தினார். அருட்தந்தை ஜேம்ஸ் வின்சென்ட் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். 1996-இல் இப்பங்கிலிருந்த பள்ளியானது புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கி.பி 2002-இல் பாரிஸ் வேதபோதகச் சபையினர் அளித்த பொருளுதவியுடன் குருக்கள் இல்லத்தைக் கட்டினார். கி.பி 2006 வரை அருட்தந்தை. பன்னீர்செல்வம் மற்றும் அருட்தந்தை இருதயசாமி இப்பங்கை ஆன்மீகத்திலும், கல்வியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண உழைத்தனர். கி.பி. 2006 ல் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சௌந்தரராஜு அவர்கள் இப்பங்கை மரியின் ஊழியர் துறவறச் சபையினர் பொறுப்பில் ஒப்படைத்தார். செர்வைட்ஸ் எனப்படும் மரியின் ஊழியர் சபைத் துறவிகள் இப்பங்கை ஆன்மீக, பொருளாதார, கல்வி வளர்ச்சியிலும் வழிநடத்தி வருகின்றனர். அருட்தந்தை பெலிக்ஸ் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து அருட்தந்தை ஆதாம் (கி.பி 2007 முதல் 2016 வரை), தற்போது அருட்தந்தை பிரசாத் இப்பங்கை வழிநடத்தி வருகின்றார். அன்னை மரியாளின் பக்தியையும் அவளின் சீடத்துவத்தையும் குறிப்பாக வியாகுல அன்னையின் பக்தியைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக வியாகுல அன்னையின் மீதுள்ள ஆன்மீகப் புரிதலையும், அன்னையின் உடனிருப்பையும் உணர்த்தும் வண்ணம் வழிபாடுகளிலும் மற்ற ஆன்மீக நிகழ்வுகளிலும் மக்களை வழிநடத்துகின்றனர். வியாகுல அன்னை செபமாலையையும், அன்னையின் துயரப்பாதையைத் தவக்காலத்தின் கடைசி வெள்ளி, அதாவது புனித வெள்ளிக்கு முந்தைய வெள்ளியன்று, வழிநடத்தியும் வருகின்றனர்.

Information

Kilnathur B.O Tiruvannamalai Tk., Tamil Nadu 606 601 - India

Church Photos

Diocese
Vellore
Country
India

Looking for Mass Timings?

View complete Mass Timings, Daily Bible Readings, and Prayer Books in the Free My Catholic Church App.

Get the Free App

Missing Information?

Help us keep this directory accurate.