Our Lady Of Lourdes
Church History
மேல்சித்தாமூர் பங்கு தொடக்கத்தில் அணிலாடி பங்கின் இறையாட்சி எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்து வந்தது. கி.பி.1875ஆம் ஆண்டிலிருந்து அணிலாடி பங்கின் எல்லைக்கு உட்பட்டிருந்த மேல்சித்தாமூர் 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் புதிய பங்காக உயர்த்தப்பட்டு இளமங்கலம், தணில், பள்ளிகுளம், மேல்கூத்தப்பாக்கம், விழுக்கம், கொணக்கன்பட்டு, தீவனூர், வெங்கந்தூர், மேல்பேரடிக்குப்பம், ரெட்டணை, துடுப்பாக்கம், நாட்டார்மங்கலம், வல்லம், ராஜாம்புலியூர், அருகாவூர், வீரணாமூர், முக்குணம், தொண்டூர், சின்னகரம், தாமனூர் ஆகிய இவ்வூர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் இப்பங்கின் கிளை கிராமங்களாக இணைக்கப்பட்டன.
கி.பி. 1875-லிருந்து 1892 வரை அருட்தந்தை அணிலாடியை தலைமையிடமாகக் கொண்டு மேல்சித்தாமூர் பகுதியில் மறைப்பணியாற்றி மக்களை இறைபராமரிப்பில் பேணி வளர்த்தார். இவரது பெரும் முயற்சியினால் 1877ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு சிற்றாலயம் மண்சுவற்றினால் இவ்வூரில் கட்டப்பட்டது. அதன்பின் 1884ஆம் ஆண்டுச் சுண்ணாம்பு, செங்கற்களைக் கொண்டு மக்களின் உதவியினால் முதல் ஆலயம் கட்டப்பட்டது. 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முதல் பங்குத்தந்தை பொறுப்பேற்று தொடர்ந்து 1893ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டுவரை 44 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிப் பங்கை உருவாக்கியவர் "மேல்சித்தாமூரின் அப்போஸ்தலர்” என்றும் “தாத்தா சாமியார்" என்றும் அழைக்கப்பட்டார், இவருடைய காலத்தில் பங்கிற்குத் தேவையான நிலங்கள் வாங்கப்பட்டன. சிற்றாலங்கள் கட்டி, பள்ளிக்கூடங்கள் உருவாக்கி மக்களுக்கு ஆன்மீக, சமூக, பொருளாதார, மருத்துவ, கல்வி தேவைகளை நிறைவேற்றினார்.
பெரும் முயற்சியினால் 1984ஆம் ஆண்டுப் பாறையின் மேல் இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது. அதன்பிறகு இவ்வூர் மக்களின் பெருமுயற்சியினால், பங்குதந்தை முழு ஒத்துழைப்பினால், நன்கொடையாளர்கள், பங்கு மக்கள் இவர்களின் உதவியினால் 05.01.2019 அன்று அருளும், ஆசீரும், அழகும், அற்புதமும் நிறைந்த தூய லூர்து அன்னை திருத்தலம் இவ்வூரில் மூன்றாவது ஆலயமாகக் கட்டியெழுப்பப்பட்டது.
மேல்சித்தாமூரில் தூய லூர்து அன்னை தொடக்கப்பள்ளியும், இளமங்கலத்தில் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியும், கடம்பூரில் மரியன்னை தொடக்கப்பள்ளியும், தாமனூரில் புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளியும் கல்விப் பணியாற்றி வருகின்றன.
புனித சூசையப்பர் குளூனி சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் 24.06.1979-லிருந்து இப்பங்கில் ஆன்மீக, மருத்துவ, கல்விப்பணிகளைச் செய்து வருகின்றனர்.
அன்பியங்கள், கொத்து நாட்டாண்மைகள், மரியாயின் சேனை, புனித வின்சென்ட் தெ பவுல் சபை, ஆசிரியர்கள் குழு, மறைக்கல்வி மன்றம், இளையோர் குழு, இயேசுவின் கண்மணிகள் இப்பங்கில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
Information
Vallam-Melsithamur Main Road,
Melsithamur B.0. - Vallam (Via)
Gingee Tk. - Villupuram Dt.
Tamil Nadu - 604 206 - India




