Manal Matha Shrine (Athisaya Manal Matha Shrine)
Church History
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பங்குகளில் ஒன்றான சொக்கன்குடியிருப்பிலிருந்து ஏறக்குறைய 5 கி.மீ. தொலைவில் தேரியோரக்கரையில் அமைந்துள்ளது அதிசய மணல் மாதா ஆலயம் முதன்மைத் திருத்தலமாகும்.
கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களின் ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார். அவர் இன்றைய கேரளப் பகுதியில் கிறிஸ்தவ சபைகளை உருவாக்கியதோடு தமிழகத்தின் தென் பகுதிகளிலும் சபை களை ஏற்படுத்தினார்.
அக்காலத்தில் இப்பகுதி வீரநாடு என்று அழைக்கப்பட்டது. இந்நாட்டு மன்னனின் மனைவி மற்றும் மகள், மாதாவின் அருளால் தீய ஆவியின் பிடியிலிருந்து குணமாகியதால், இப்பகுதியில் கிறிஸ்தவ ஒளியை ஏற்றும் வண்ணம், மாதா குருசடி அமைத்து இறைவனை வழிபட வகை செய்தார். பின்னர் இம்மக்களை மலபார் சபையினரும், வெளிநாட்டு அர்மேனிய சபையினரும் வழி நடத்தி வந்தனர்.
கி.பி. 1325-ல் கணக்கன்குடியிருப்பு என்ற ஊரில் வாழ்ந்த ஒரு பக்தரின் கனவில் அன்னை மரியாள் தோன்றி ஆலயம் அமைக்கக் கேட்டுக் கொண்டார். பக்தரும், மக்கள் உதவியுடன் அன்னைக்கு அழகிய சிறிய ஆலயம் அமைத்தார்.
கி.பி. 1339-ல் போப்புவின் தூதுவராக இந்திய கிறிஸ்தவர்களை சந்திக்க வந்த ஜியோ வான்னி மரிஞ்ஞோலி ஆயர் அவர்கள், மாதாவின் சுரூபத்தை வடிவமைத்து ஸ்தாபித்தார். மாதாவின் சொரூபம் சந்தன மரமும், யானைத்தந்தமும் இணைத்து பழங்கால அமைப்பில் அழகுடனும் உயரத்தில் சிறியதாகவும் செய்யப்பட்டுள்ளது (இச்சுரூபமே இன்று மணல் மாதாவாகப் போற்றப்படுகிறது). கி.பி. 1542-ல் இவ்வாலயம் வந்த புனித சவேரியார், இங்கு இறந்த ஒருவனுக்கு உயிர் கொடுத்து அன்னையின் புகழைப் பரவச் செய்தார்.
இப்பகுதி, சிவப்பு பட்டுக்கம்பளம் விரித்தாற்போல் சிவப்பு மணலால் நிரம்பியிருப்பதற்கு ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
கி.பி. 1597-ல் இப்பகுதியை அரசூர் மன்னன் துறவிப்பாண்டியன் ஆண்டு வந்தார்.
சேசுமரியாயி என்பவர், கணக்கன்குடியிருப்பில் வாழ்ந்துவந்த பக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவள். பனைத்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்த இவரது தந்தை, ஒருநாள் பனைத்தொழிலில் ஏற்பட்ட விபத்தினால் இறந்தார். குடும்பம் வறுமையில் வாடியது. சேசுமரியாயியின் தாய் கூலி வேலை செய்து தன் மகளை வளர்த்து வந்தார்.
சேசுமரியாயி ஏழையாய் இருந்தாலும் அழகாய் இருந்தார். அந்த ஊர் பணக்காரர் மகன் உட்பட பல இளையோர் அவரை அடைய முயன்று தோற்றனர். ஆயினும், சேசுமரியாயின் தாய், தன் மகள் விரும்பியபடி தனது உறவினர் சூசைமுத்துவிற்கு அவரை மணமுடித்து வைத்தார். பணக்காரரின் மகன் கடுஞ்சினம் கொண்டு தந்திரமாக சூசைமுத்துவை கொலை செய்து, விபத்தில் இறந்து விட்டதாக ஊரை நம்பவைத்தான். சேசுமரியாயியின் துயரைக் காணச் சகிக்காமல் அவரது தாயும் இறந்தார்.
தாயின் இறப்புக்குப் பின்னர் சேசுமரியாயி ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டார். அன்னை மரியாயின் மீது பக்தி கொண்ட சேசுமரியாயி மாதாவின் காலடியில் தஞ்சமடைந்தார்.
கணக்கன்குடியிருப்பின் வடக்குப் பகுதியில் 'புத்தன்தருவை' என்னும் குளம் உள்ளது. சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தில் எந்த பருவ காலங்களிலும் தண்ணீர் வற்றாது. இங்கு பெரும் அளவில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கின. குறிப்பாக நாரை என்னும் கொக்கு இனங்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வாழ்ந்ததால் இக்குளத்திற்கு 'நாரைக்குளம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு.
ஒருநாள் அன்னை மரியா, சேசுமரியாயியிக்கு கனவில் தோன்றி, "மகளே அஞ்சாதே! இறைவல்லமையின் மகிமையைக் காலையில் காண்பாய்" என்று கூறி மறைந்தார்.
சேசுமரியாயியின் வீட்டின் முன்பு பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் நாரைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. காலையில், ஆலமரத்தடியில் பறவைகளின் எச்சங்களுடன், ஏராளமான மீன்களும் சிதறிக் கிடந்தன. இவ்வதிசயத்தைக் கண்ட சேசுமரியாயி இரவில் தான் கண்ட காட்சியை நினைத்து, இது அன்னை மரியாளின் திருவிளையாடல் என்று உணர்ந்தார்.
அன்றிலிருந்து நாரைகள், குளத்தில் மீன்களைப் பிடித்து உண்டுகளித்து, இரவில் மரத்தில் தங்க வரும்போது மீன்களை எடுத்து வந்து சேசுமரியாயியின் வீட்டில் போடுவதை வழக்கமாகக் கொண்டன. தினமும் காலையில், அந்த மீன்களையெல்லாம் சேகரித்துச் சமைத்து உண்டு வந்தார்.
இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட அந்த ஊர் பணக்காரர் மகன், சேசுமரியாயிக்கு பறவைகள் மீன் தரவில்லை, யாரோ ஓர் ஆண் இரவில் வந்து தங்கிவிட்டு மீன்களைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான். இப்படிப்பட்ட விபச்சாரிகளை ஊரில் வைக்கக் கூடாது என்று மக்களைத் தூண்டி விட்டான். ஊர் மக்கள் அனைவரும் சேசுமரியாயி விபச்சாரி என்று பழி சுமத்தி மன்னன் துறவிப்பாண்டியன் முன் கொண்டு நிறுத்தினார்கள்.
சேசுமரியாயி தான் குற்றமற்றவள் என்று சொல்லியும் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. மன்னரும் சூழ்நிலையின் கைதியானார். சேசுமரியாயியை அக்கால வழக்கப்படி நடைவிளக்கெரித்து கொலைசெய்ய உத்தரவிட்டார் மன்னர்.
நடைவிளக்கெரித்தல் என்பது அக்காலத்தில் விபச்சாரக் குற்றத்திற்கு அளிக்கும் கொடூரமான தண்டனையாகும். குற்றவாளியின் தலையை மொட்டை அடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுத்தில் எருக்குமாலை, செருப்புமாலை அணிவித்து, சிறிய அளவில் சிலுவை வடிவம் செய்து தோளில் வைத்து, தலையில் முள்முடி வைத்து, இறுதியில் உச்சியில் சிறிய துளையிட்டு எண்ணெய் ஊற்றி தீ வைத்து, எறிந்த நிலையில் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். தீ மெல்ல மெல்லப் பரவி, பெருந்தீயாக மாற குற்றவாளி துடிதுடித்துச் சாவாள்.
இந்தக் கொடிய தண்டனையில் நெருப்பின் வெப்பம் தாங்கமுடியாமல் சேசுமரியாயி இறுதியில் சாபமிட்டார். என்னை அவமானப்படுத்திய கணக்கன்குடியிருப்பு அழியட்டும். மண்மாரி பொழியட்டும். மண்மேடாய் குவியட்டும். ஒருவர்கூட உயிர் தப்பாது செத்தொழியட்டும் என்றபடி உயிர்விட்டார்.
பெரும் சூறாவளி வீசியது; மண்மாரிப் பொழிந்தது. ஊர் முழுவதும் அழிந்தது. அத்தோடு அன்னையின் ஆலயமும் மண்ணுக்குள் புதைந்து மறைந்து போனது. கணக்கன்குடியிருப்பின் அப்பகுதி கொடிய விலங்குகள் வாழும் வனாந்தரமாக மாறிப்போனது. மணற்பரப்பான இவ்விடத்தில் தற்போது முட்புதர்களுக்கும் காட்டுச் செடிகளுக்கும் குறையில்லை. அங்குமிங்கும் சில ஆலமரங்களும், அத்திமரங்களும் உள்ளன.
தருவை என்ற ஊரை அடுத்துள்ள இந்த மணல்மேடு பகுதியிலுள்ள காடுகளில் ஆடு மேய்க்கும் இடையர்கள் ஆலமர நிழலில் தங்கி இளைப்பாறிச் செல்வது வழக்கம். 1798ம் ஆண்டு சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த இடையன் ஒருவன், இந்த மணல் மேட்டில் ஆடுகளை ஓட்டிச் சென்றான். தன் ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுக்க தருவையை நோக்கிச் செல்லும் வழியில் ஏதோ கால்களில் தட்டுப்பட, அவன் இடறி கீழே விழுந்தான். கால்களில் தட்டுப்பட்டது ஏதோ மரத்தின் வேராக இருக்கக் கூடும் என்று எண்ணியபடியே ஆடுகளை மேய்த்துச் சென்றான்.
அன்று இரவில் அன்னை மரியாள் அவனுக்குக் கனவில் தோன்றி, "தேரியில் உனது கால்களைத் தடுத்தது நான்தான். அவ்விடத்தைத் தோண்டிப்பார்" என்று கூறி மறைந்தாள். விடிந்ததும் தான் கண்ட கனவு பற்றிச் சிந்தித்த அம்மனிதன், முதல் நாள் தடுக்கி விழுந்த இடத்துக்கு வந்தான். மணலை அகழ்ந்து பார்த்தான். அங்கு ஆலய முகப்பின் முழுச்சிலுவையும், அதன் கீழ்யிருந்த கூரை ஓடுகளும் தென்பட்டதைக் கண்டு மிகவும் வியப்புற்றான். உடனே காலம் தாழ்த்தாது சொக்கன்குடியிருப்புக்கு வந்து தான் கனவில் கண்ட காட்சி பற்றியும், பின்னர் நடந்தவை அனைத்தையும் அங்குள்ள மக்களிடம் உரைத்தான். அந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட மக்கள் அனைவரும் வியந்துபோயினர்.
அந்நாட்களில், சொக்கன்குடியிருப்பு, வடக்கன்குளம் பங்கோடு இணைந்திருந்தது. வடக்கன்குளம் பங்குத்தந்தை சொக்கன்குடியிருப்பைக் கண்காணித்து வந்தார். ஆகவே தேரியில் கண்ட அதிசயச் செய்தி வடக்கன்குளம் பங்குத்தந்தைக்கும் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் பங்குத்தந்தை தலைமையில் சொக்கன்குடியிருப்பு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். பல வாரங்கள் அயராது பாடுபட்டு அன்னையின் ஆலயத்தை வெளிக்கொணர்ந்தனர்.
மணல் முழுவதையும் அப்புறப்படுத்திவிட்டு, ஆலயக் கதவைத் திறந்து பார்த்தபோது, அதிசயத்திலும் அதிசயம்! புராதன அமைப்பிலிருந்த நடுப்பீடத்தில், குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தியபடி விண்ணக அன்னையின் அழகிய திருவுருவம் மக்களைப் பார்த்துப் புன்னகைத்தது. அப்புன்னகையும், அதிசயமாக அணையாது எரிந்து கொண்டிருந்த விளக்கொளியும் ஆலயத்தைப் பிரகாசிக்க வைத்தது.
இவ்வதிசயத்தைக் கண்ட மக்கள் புனித பரலோக அன்னையை 'அதிசய மாதா' என்று அழைத்து மகிழ்ந்தனர். மேலும் தேரிக்காட்டுக்குள்ளிருந்ததால் 'காட்டுமாதா' என்றும் மணலுக்குள்ளிருந்து கிடைத்ததால் 'மணல்மாதா' என்றும், அதிசயங்கள் பல நடத்தி வருவதால் 'அதிசய மணல்மாதா' என்றும் போற்றுகின்றனர்.
அன்னையின் இருமருங்கிலும் இயேசு சபையை ஆரம்பித்த புனித இஞ்ஞாசியார், அந்தோணியார் ஆகிய இருவரின் திருவுருவங்கள் உள்ளன. இதனால் இவ்வாலயத்தை முதன்முதலில் இயேசு சபைக் குருக்கள்தான் கட்டியெழுப்பினர் என்பதை ஊகிக்கலாம்.
ஆலயச் சிறப்பையும், அன்னையின் மகிமையையும் கண்டு தமிழக அரசு 2011-2012ம் ஆண்டு இந்த ஆலயத்தைத் தமிழக அரசின் சுற்றுலாத் தலமாக அறிவித்து ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
Information
Sokkankudiyiruppu B.O.
Sathankulam Tk. - Tuticorin Dt.
Tamil Nadu - 628 653 - India




